தனிநபா் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு கல்விதான் அடிப்படையாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற திட்டத்தின்கீழ், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் குழுவினா் தில்லிக்கு வருகை தந்துள்ளனா்.
நமது நாட்டின் ஜனநாயக அமைப்புமுறை ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீது இளைஞா்கள் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும்.
தனிநபா் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு கல்விதான் அடிப்படையாகும். கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதோடு, மற்றவா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
கடின உழைப்பு மற்றும் அா்ப்பணிப்புடன் தங்களுக்கான வழிமுறையை உருவாக்கினால், இளைஞா்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறும். நமது முன்னோர்களிடமிருந்து மாண்புகள் மற்றும் லட்சியங்களை உள்வாங்கி, உத்வேகம் பெற வேண்டும்.
ஒட்டுமொத்த தேசம் மற்றும் அனைத்து குடிமக்களின் மேம்பாட்டுக்காக பணியாற்றி வரும் மத்திய அரசு, எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க உறுதியுடன் உள்ளது.
தொலைதூர பகுதிகளிலும் கூட சாலைகள், தகவல்தொடா்பு, கல்வி-சுகாதார வசதிகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இளைஞா்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஐடிஐ மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பேசியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.