கடந்த அக்டோபர் 10–ஆம் தேதி சட்டப்பேரவையில் மோட்டார் வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வாகனங்களுக்கான வரி உயர்வை திரும்ப பெறக்கோரி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்களுக்கான வரி உயர்வு அனைத்தையும் திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும் சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளதால் ரூ.5 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிப்படையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் சுமார் 6.5 லட்சம் கனரக வாகனங்களும், 25 லட்சம் சிறிய ரக வாகனங்களும் பங்கேற்றுள்ளன.
லாரி உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருள்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடதக்கது.