அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த இடைக்கால தடை விதித்ததை எதிர்த்த மேல்முறையீட்டு மனு நவ.15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் நவ.7ம் தேதி பிறப்பித்த உத்தரவில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து, வழக்கை நவ.30-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் கடந்த 8-ம் தேதி, தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்துவிட்டால், வழக்கை இன்று (நவ.10) விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்தபிறகும்கூட, வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே, இன்றைக்கே இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து வழக்கை புதன்கிழமைக்கு விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.