உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் எல்டாகோ அமன்ட்ரன் செக்டார் பகுதியை சேர்ந்த சவுரவ் சிங்(40), தனது மகள்(8) மற்றும் மாமனார் விஜயகுமார்(72) ஆகியோருடன் இணைந்து வீட்டின் முன்னால் உள்ள சாலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டிருந்தார்.
அப்போது, அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த 3 பேர் மீதும் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்தியவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த விபத்து குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.