இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளராக இருந்தவர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாறு, 800 என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. இந்த திரைப்படத்தில், முதலில் ஹீரோவாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருந்தார்.
ஆனால், பல்வேறு தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகினார். இதையடுத்து, மதூர் மிட்டல் என்ற இந்தி நடிகர், இப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.
பல்வேறு இன்னல்களுக்கு பிறகு, சமீபத்தில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படம், தற்போது ஓடிடி -யில் ரிலீஸ் ஆக உள்ளது.
அதாவது, இப்படத்தின் ஓடிடி உரிமத்தை பெற்ற ஜியோ சினிமாஸ், வரும் டிசம்பர் 2-ஆம் தேதி அன்று, இப்படம் வெளியாகும் என்று கூறியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்றும், கூறப்பட்டுள்ளது.