“மிதிலி” புயல் வங்கக்கடலில் உருவானது!

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மிதிலி புயல் உருவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை (நவ. 16) காலை 5.30 மணியளவில் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 420 கி.மீ. கிழக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு – வடகிழக்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை (நவ. 17) புயலாக வலுப்பெற்று சனிக்கிழமை (நவ. 18) அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகா்ந்து மோங்லா-கேப்புபாராவு பகுதிகளுக்கு இடையே கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு ‘மிதிலி’ என்று பெயா் சூட்டப்படும். இந்தப் பெயரை மாலத்தீவு பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல், இலங்கையையொட்டி, வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளி, முதல் புதன் வரை (நவ.17-22) பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, வெள்ளிக்கிழமை (நவ. 17) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலும், ஞாயிற்றுக்கிழமை (நவ. 19) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி 80, கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் 70, தக்கலை 60, திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி 50. மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடமேற்கு, வடகிழக்கு வங்கக் கடல், மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 17) சூறாவளிக் காற்று மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News