பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும். காஸ் சிலிண்டரின் விலை ரூ.500-க்கு விற்கப்படும். அரசுப் பேருந்துகளில் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிதி உதவி ஆண்டுதோறும் வழங்கப்படும். குத்தகை விவசாயிகளுக்கும் இதேபோல் உதவி வழங்கப்படும். விவசாய கூலிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். நெல்லுக்கு குவிண்ட்டாலுக்கு ரூ.500 போனசாக வழங்கப்படும். கிரக ஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட இலவசமாக நிலம் வழங்கப்படும். வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். மாணவர்கள் தங்களின் கல்லூரி கட்டணத்தைக் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். தெலங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு 750 சதுர அடி நிலம் வழங்கப்படும். மூத்த குடிமக்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள், பீடி சுற்றும் தொழில் செய்பவர்கள், தனியாக வாழும் பெண்கள், நெசவாளர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். ரூ.10 லட்சம் மதிப்புள்ள சுகாதார காப்பீடு வழங்கப்படும்.