பாலியல் வன்கொடுமை செய்பவர்களை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரித்ததில்லை. ஆனால் பாஜக எப்போதும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை ஆதரித்தே வந்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கௌரவ் வல்லப் விமர்சனம் செய்துள்ளார்.
அவர் பேசியதாவது:
“மற்ற மாநிலங்களைவிட ராஜஸ்தானில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அதற்கு காரணம் ராஜஸ்தானில் புகார் கொடுக்க வருபவர்களின் அனைத்து புகார்களையும் பதிவுசெய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் பெரிய குற்றங்களுக்கு கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் மூடி மறைத்து விடுவார்கள். பாலியல் வன்கொடுமை செய்பவர்களை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரித்ததில்லை. ஆனால் பாஜக எப்போதும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை ஆதரித்தே வந்துள்ளது. பிரிஜ் பூஷன் சிங் வழக்கில் பாஜக எப்படி நடந்துகொண்டது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்று தந்த மல்யுத்த வீராங்கனைகள் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் அளித்தபோது, மல்யுத்த வீராங்கனைகளை ஆதரிக்காமல் அவர்களுக்கு எதிராக இருந்தவர் பிரதமர் மோடி. குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கை பாதுகாப்பதில் மட்டுமே அவர் அக்கறை செலுத்தினார்.
தற்போது பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் பிரதமர் மோடி ஏன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நிற்கவில்லை. ஆனால் காங்கிரஸ் எப்போதுமே பெண்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.” என்று பேசினார்.