தொடர் கனமழை காரணமாக ஆவடியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 21-இல் தொடங்கியது. தொடக்கத்தில் மந்த நிலையில் இருந்த மழைப் பொழிவு நவம்பா் மாதத்தில் வலுவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வந்தது.
நேற்று காலைமுதல் இன்று காலை வரை சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாலை 5 மணிமுதல் இரவு வரை இடைவிடாமல் தொடா்ந்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போலத் தேங்கியது.
இந்நிலையில், ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயில் 26-ஆவது வார்டு சோழன் நகர், ஆடியபாதம் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பல்லவன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை வெள்ளம் குடியிருப்பில் சூழ்ந்தது.
குடியிருப்புகளில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழை வெள்ளம் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நுழைந்ததால் பொது மக்களின் உடைமைகள் மழை வெள்ளத்தில் மிதக்கும் சூழல் ஏற்பட்டது.
வீட்டில் இருந்த கட்டில் பீரோ பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தண்ணீரில் நனைந்தபடியே இருந்தது. மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு தேங்கியுள்ள மழை வெள்ளத்தை அகற்ற வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.