திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
லஞ்ச ஒழிப்பு துறையினரின் நடவடிக்கைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியிருப்பதாவது, “ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள், அமலாக்கத்துறை பாஜக, லஞ்ச ஒழிப்புத்துறை பாஜக என திமுகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். அப்படியெனில் தமிழக காவல்துறையை திமுக என குறிப்பிடலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை. இப்படி இருக்கையில் இந்த துறையின் அலுவலகத்தில் நாங்கள் ரெய்டு நடத்துவோம் என மாநில லஞ்ச ஒழிப்பு துறை கூறுகிறது எனில், இது தவறான முன்னுதாரணம். தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை எடுத்து சென்றுக்கொண்டிருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.