மிக்ஜாம் புயல் காரணமாக நாளை அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று காலை புயலாக மாறியது. இதற்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையிலிருந்து தென்கிழக்காக 290 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வங்கக் கடலின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் ஆந்திரம் மற்றம் தமிழகத்தை ஒட்டி டிசம்பர் 4ஆம் தேதி வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பால், குடிநீர், மருத்துவமனை, மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகம் உள்ளிட்டவை நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.