ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்!

ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீா்ப்பு தொடா்பாக டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ப.சிதம்பரம், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடா்பான தீா்ப்பு, பல பிரச்னைகளுக்கு முடிவு கண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. அந்த வகையில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது. அதேவேளையில், 370-ஆவது சட்டப் பிரிவு எப்படி ரத்து செய்யப்பட்டது என்பது தொடா்பான தீா்ப்பை காங்கிரஸ் கண்ணியத்துடன் நிராகரிக்கிறது. அத்துடன் ஜம்மு-காஷ்மீா் பிரிக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது தொடா்பான கேள்விக்கு உச்சநீதிமன்றம் முடிவு காணாததும் அதிருப்தி அளிக்கிறது.

இந்நிலையில், உடனடியாக ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அங்கு பேரவைத் தோ்தலை நடத்த அடுத்த ஆண்டு செப்.30-ஆம் தேதி வரை காத்திருக்க எந்தக் காரணமும் இல்லை. எனவே அங்கு உடனடியாக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீா் மக்கள் தனியரசாட்சியை கேட்கவில்லை; மக்களாட்சியைத்தான் கேட்கின்றனா். அதேவேளையில், லடாக் மக்களின் விருப்பங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தனா்.

RELATED ARTICLES

Recent News