தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான கே சந்திரசேகர் ராவ் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டின் குளியல் அறையில் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவர் சோமஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எலும்பு மாற்று அறுவை சிகிச்சை பிறகு கேசிஆரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் கேசிஆரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் கேசிஆர் மருத்துவமனையில் இருந்தப்படி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “போக்குவரத்து நெரிசலை பாதிக்கும் என்பதாலும் இங்குள்ள நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்பதாலும் கட்சியினர் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்” என கூறியுள்ளார்.