ரூ.50,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் அடிக்கடி போதைப் பொருட்கள் கடத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மும்பை ஜோகேஸ்வரி கிழக்கு தொகுதியின் பேரவை உறுப்பினர் சிவசேனாவைச் (யுபிடி) சேர்ந்த ரவீந்திர வெய்கர் சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பட்னாவிஸ் நேற்று அளித்த பதில் பின்வருமாறு:
நாசிக் மாவட்டம் எம்ஐடிசி ஷிண்டே கானில் உள்ள தொழிற்சாலையில் நடத்திய சோதனையில், மும்பை காவல்துறை ரூ.300 கோடி மதிப்புள்ள 151 கிலோ மெபெட்ரோன் போதைப்பொருளை கைப்பற்றியது. மேலும் இது தொடர்பான வழக்கில் 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்னர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடத்திய சோதனைகளின் மூலம் ரூ.50,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனனர்.
மும்பையில் உள்ள 2,200 கடைகளை தொடர்ந்து ரகசிய கண்காணிப்பில் வைத்திருப்பதன் மூலம் போதைப் பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஒரு சில சமூக விரோதிகள் போதை மருந்து தயாரிக்க மூடப்பட்ட ஆலைகளை பயன்படுத்திக் கொள்வதையும் கண்டறிந்துள்ளோம். அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்தார்.