அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரதிமா தேவி. 43 வயதான இவருக்கு, ஹிமான் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி அன்று, தனது தாயிடம், ரூபாய் 5 ஆயிரம் பணத்தை, ஹிமான் கேட்டுள்ளான்.
அதற்கு, அவர் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே, கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் கோபம் அடைந்த ஹிமான், தனது தாயின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, அவரது சடலத்தை அப்புறப்படுத்த முயற்சி செய்த அவர், சூட்கேஸ் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில், தனது தாயின் உடலை வைத்து, பிரயாக்ராஜ் பகுதிக்கு, ரயிலில் எடுத்து சென்றுள்ளார்.
அங்கிருந்து, திரிவேணி சங்கமம் இடத்திற்கு சென்ற அவர், அங்கு உடலை அப்புறப்படுத்திவிடலாம் என்று எண்ணினார். ஆனால், அப்போது அங்கு வந்த காவல்துறையினர், ஹிமானை கண்டு, சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும், அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
இதனால், காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து, அவர் வைத்திருந்த சூட் கேசை திறந்து பார்த்துள்ளனர்.
அதில், அவரது தாயின் சடலம் கிடப்பதை பார்த்த அவர்கள், ஹிமானை கைது செய்தனர். செலவுக்கு பணம் தராத தாயை, கழுத்தை நெறித்து மகனே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.