திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் அதிகளவு திருடப்பட்டு வருவதாக காவல் துறைக்கு தொடர்ச்சியாக புகார் வந்தது. இதையடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர். பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான கோல்டன் நகர் பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் விசாரித்துள்ளனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் பாஷா மற்றும் அவிநாசி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கார்த்திக் என்பவர் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடி அதனை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிக்கந்தர் பாஷாவிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த வடக்கு குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். சிக்கந்தர் பாஷா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.