உத்தரபிரதேச மாநிலம் வாரனாசியில், ஸ்வர்வெத் மகாமந்தீர் என்ற உலகின் மிகப்பெரிய தியான மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நாம் அடிமைகளாக ஒடுக்கப்பட்டிருந்த காலத்தில், நம்மை ஒடுக்கியவர்கள், நம்மை பலவீனம் ஆக்குவதற்கு, நமது சின்னங்களை குறி வைத்தார்கள்.
சுதந்திரத்திற்கு பிறகு, நமது பாரம்பரிய சின்னங்களை மீண்டும் உருவாக்குதல், மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறினார். மேலும், இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு, சோம்நாத் கோவிலை மீண்டும் கட்டுவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தன.
இதன் விளைவாக, நாடு நமது பாரம்பரியத்தின் பெருமைகளை நினைப்பதற்கு மறந்துவிட்டது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகளுக்கு பிறகு, காலத்தின் சக்கரம் மீண்டும் ஒருமுறை சுற்றியுள்ளது. அடிமை மனோபாவத்தில் இருந்து இந்தியா வெளியேறிவிட்டது என்று செங்கோட்டையில் இருந்து நமது நாடு அறிவித்தது.’ என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘விஷ்வநாத் கோவிலின் பிரம்மாண்டம் இந்தியாவின் பெருமையை பாடுகிறது’ என்றும், ‘பல நூற்றாண்டுகளாக, பொருளாதார செழுமை, மேம்பாடு ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக, இந்தியா திகழ்ந்து வருகிறது’ என்றும் அவர் கூறினார்.