புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள குறிப்பிட்டு வீடு ஒன்றிற்கு, 70 வயது முதியவர் ஒருவர் சென்றுள்ளார்.
அந்த வீட்டின் வாசலில் நின்றுக் கொண்டிருந்த அவர், ‘உங்கள் குடும்பத்திற்கு யாரோ செய்வினை வைத்து விட்டார்கள். அதனை நீக்கவில்லை என்றால், ஒட்டுமொத்த குடும்பமே ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துவிடும்’ என்று கூறியிருக்கிறார்.
முதியவரின் பேச்சை நம்பிய அந்த வீட்டு உரிமையாளர், ‘என்ன பரிகாரம் செய்ய வேண்டும்’ என்று கேட்டுள்ளார். இதையடுத்து, 3 நாட்கள் பூஜை செய்ய வேண்டும் என்று அந்த முதியவர் கூறியுள்ளார்.
அதன்படி, முதியவர் முன்னிலையில் வீட்டு உரிமையாளர் பூஜையும் நடத்தியுள்ளார். 3-வது நாள் அன்று, போலி பூசாரிகளுக்கான சில சித்து வேலைகளை செய்த அந்த முதியவர், அவர்கள் வீட்டில் இருந்து தங்கச் சங்கிலியை நேக்காக திருடிச் சென்றுள்ளார்.
ஆனால், முதியவர் சொன்னவை அனைத்தும் உண்மை என்று 3 நாட்கள் நம்பிய வீட்டு உரிமையாளர், அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்துள்ளார்.
இதையடுத்து, அவர் காவல்துறையில் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த முதியவரின் புகைப்படம் மட்டும் தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது.
தொடர்ச்சியாக நடத்தப்பட்;ட விசாரணையில், இந்த முதியவர் மக்களின் மூடநம்பிக்கைகளை பயன்படுத்தி, பல்வேறு கிராமங்களில், நகைகளை திருடிச் சென்றிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.