1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்தபோது, போக்குவரத்துத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார்.
அப்போது, அவர் தனது வருமானத்துக்கு அதிகமாக, ரூபாய் 1.36 கோடி சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக, 2011-ல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், பொன்முடியின் மனைவி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து, கடந்த ஜுன் மாதம் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த வழக்கை தாமாக முன்வந்து, உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மீண்டும் விசாரிக்க முன்வந்தார். மேலும், இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், கீழமை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் தண்டனை விவரங்கள், வரும் டிசம்பர் 21-ஆம் தேதி அன்று தெரிவிக்கப்படும் என்றும், நீதிமன்றம் தெரிவித்துள்ளது.