கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பெட்டியால் பரபரப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் மூலம் பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலுக்குச் சென்று மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.

இன்று மழை மற்றும் கடற்காற்று அதிகமாக இருந்ததால் திருமுல்லைவாசல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில், இன்று காலை கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பார்க்கச் சென்ற மீனவர்கள் கடற்கரையில் ஒன்றரை அடி நீலமும், ஒரு அடி அகலமும் கொண்ட சந்தன கலர் பெயிண்ட் பூசப்பட்ட, சீல் இடப்பட்ட இரும்பு பெட்டி ஒன்று கரை ஒதுங்கி இருப்பதை கண்டனர்.

இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் கடல் சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு, கடலோர காவல் குழுமம், க்யூ பிரிவு, தனிப்பிரிவு மற்றும் சீர்காழி சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம பெட்டியை கைப்பற்றி மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெட்டி முழுவதுமாக சீல் இடப்பட்டுள்ளதால் உள்ளே என்ன உள்ளது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. கப்பல் மற்றும் விமானத்தில் பயன்படுத்தப்படும் பெட்டியா அல்லது கடத்தல் பொருட்கள், வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமுல்லைவாசல் கடற்கரையில் மர்ம பெட்டி கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News