தென் ஆப்பிரிக்காவை மிரட்டிய இந்திய அணியின் இளம் படை: தொடரை வென்றது!

இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 17-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி பார்ல் நகரில் நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் ராஜத் படிதார் 22 (16) ரன்களும், சாய் சுதர்சன் 10 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அதன் பின்னர் கே.எல்.ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவருடன் இணைந்து திலக் வர்மா நிதமான ஆட்டத்தை ஆடினார். இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

அரைசதம் விளாசிய திலக் வர்மா 52 ரன்களில் அவுட் ஆக, சஞ்சு சாம்சன் முதல் சதத்தினை பதிவு செய்தார். பின்னர் அவர் 114 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் அதிரடியாக 38 ரன்கள் எடுக்க, இந்திய அணி 296 ரன்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்றிக்ஸை 19 ரன்களில் அர்ஷ்தீப் சிங் வெளியேற்றினார்.

பின்னர் வந்த வான் டெர் டசனை 2 ரன்னில் அக்சர் படேல் போல்டாக்கினார். எனினும் மார்க்கரம், ஜோர்சி பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

வாஷிங்டன் சுந்தர் இந்த கூட்டணியை உடைத்தார். அவரது ஓவரில் மார்க்கரம் 36 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து அரைசதம் விளாசிய ஜோர்சி 81 (87) ரன்களில் அர்ஷ்தீப் சிங் ஓவரில் lbw முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 45.5 ஓவரில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) 4 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதையும், அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

RELATED ARTICLES

Recent News