தென் மாவட்டங்களிலிருந்து வரும் விரைவுப் பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை (டிச.31) முதல் கிளாம்பாக்கத்துக்கு வரும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
கிளாம்பாக்கத்தில், பேருந்து முனையத் திறப்பு விழாவுக்குப் பிறகு அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தென் மாவட்டங்களிலிருந்து வரும் விரைவுப் பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை (டிச.31) முதல் கிளாம்பாக்கத்துக்கு வரும். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் செல்லாது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் சாதாரண நாள்களில் 300-ம், வார இறுதி நாள்களில் 360-ம் இயக்கப்படும். இந்த விரைவுப் பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்படும்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் கிளாம்பாக்கத்திலிருந்து நகரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படும். கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிஷத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படும்.
விரைவு போக்குவரத்துக் கழகத்தைத் தவிா்த்து, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து, அந்தந்த வழித்தடங்களில் இயங்கும். பொங்கல் பண்டிகை வரை இதே நிலை தொடரும். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளும் சேவையைத் தொடங்கியுள்ளன. பொங்கல் பண்டிகை வரை சென்னை நகரத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கினாலும், அதற்குப் பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.