புதுச்சேரி காவல் துறை பிரிவின் பேண்ட் குழுவின் துணை உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் வீரவத்திரன். வழக்கமாக வரும் நேரத்திற்கு முன்பாகவே இன்று காலை 5 மணிக்கு கோரிமேட்டில் உள்ள காவல்துறையின் பேண்டு வாத்தியக்குழு அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அலுவலக வாயிலின் முன்பாக இருந்த சப்போட்டா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுமார் 6 மணியளவில் பணிக்கு வந்த மற்ற காவலர்கள், வீரவத்திரன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து தன்வந்திரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீரவத்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீரவத்திரனின் சட்டைப்பையில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில் கடந்த சில வருடங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் இதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை பேண்டு வாத்தியக்குழு அலுவலகத்தில் துணை உதவி ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.