பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி மாதம் நடத்தப்படும். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இப்போட்டியினை தமிழக சட்டதுறை அமைச்சர் ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். புதுக்கோட்டை, திருச்சி ,மதுரை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இருந்து 750க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வந்துள்ளன.
மொத்தம் பத்து சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு சுற்றுக்கு 30 பேர் என மொத்தம் 300பேர் கலந்து கொள்ள உள்ளனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பைக், மிக்ஸி, கிரைண்டர், சேர் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கபட்டு வருகின்றன.