கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி திமுக இளைஞரணி 2-ஆவது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னையில் புயல் மழை மற்றும் தென் மாவட்டங்களில் எதிர்பாராத மழை வெள்ளம் காரணமாக மாநாடு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பெத்தநாயக்கன்பாளையத்தில், திமுக இளைஞரணி மாநாடு இன்று காலை 9.00 மணியளவில் கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்குகிறது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கொடியினை ஏற்றி வைக்கிறார்.
தொடர்ந்து காலை 9.30 மணியளவில், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் ஜோயல் வரவேற்புரையாற்றுகிறார்.
தொடர்ந்து மாநாட்டுத் திடலை திமுக மாணவரணி செயலாளர் சி வி எம் பி எழிலரசன் திறந்து வைக்கிறார்.
9.45 மணியளவில் மாநாட்டின் தலைவராக, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை முன்மொழிதலும் வழிமொழிதலும் நடைபெறுகிறது.
காலை 10.00 மணியளவில், திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு , ‘மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்’ உரை நிகழ்த்துகிறார்.
10.15 மணியளவில் அரசு கொறடா கோவி.செழியன், மொழிப்போர்த் தியாகிகளின் திருவுருவப் படங்களைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
தொடர்ச்சியாக காலை 11.00 மணிக்குத் தொடங்கி, மாலை 6.00 மணிவரை, பல்வேறு தலைப்புகளில் ‘சொற்பொழிவரங்கம்’’ நடைபெறுகிறது.
முக்கிய தலைவர்கள் உரைக்கு பின் மாலை 6.00 மணியளவில் பல்வேறு தீர்மானங்கள், நிறைவேற்றப்பட உள்ளது.