சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில் 393 கோடி செலவில் புதிய பேருந்து முனையம் கட்டுப்பட்டு அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
அதற்கு கிளாம்பாக்கத்தில் போதிய இட வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து துறை சார்பில் இன்று வெளியான அறிவிப்பில் கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் தவிர்த்து மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறினால் மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படி மட்டுமல்லாமல் கிரிமினல் சட்ட நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.