ஜெர்மனியின் தென்மேற்கு நகரமான மன்ஹெய்மில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடந்த வாரம் சிகிச்சைக்காக 72 வயது மூதாட்டி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அருகே 79 வயது மூதாட்டி ஒருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் வெண்டிலேட்டரில் இருந்து வந்த சத்தம், 72 வயது மூதாட்டிக்கு பெரும் இடையூறாக இருந்துள்ளது.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற 72 வயது மூதாட்டி எழுந்து சென்று அந்த வெண்டிலேட்டர் சாதனத்தை அணைத்து விட்டார். சிறிதுநேரத்தில் அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் வெண்டிலேட்டர் அணைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து, இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 72 வயது மூதாட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வெண்டிலேட்டர் அணைத்து வைக்கப்பட்டதால், 79 வயது மூதாட்டியின் உடல்நிலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.