நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தின் படப்பிடிப்பு, திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள சாலை மற்றும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன்பகுதியில் இன்று நடைபெற்றது.
இதன்காரணமாக, அந்த பகுதிக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, வேறு வழியில் போலீசார் திருப்பி விட்டனர்.
இதனால் திருப்பதி மலைக்கு செல்ல வேண்டிய பக்தர்கள், மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ்கள், அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலின் முன் பகுதியில் படப்பிடிப்பை நடத்த முற்பட்டனர். இதனால் அங்கு சாமி கும்பிடுவதற்காக வந்திருந்த பக்தர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
இந்த காட்சிகளை தெலுங்கு தொலைக்காட்சி சேனல் ஒன்றின் ஒளிப்பதிவாளர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்தார். அவரிடம் இருந்து செல்போனை பிடுங்க முயன்ற பட குழுவினர், அந்த செய்தியாளரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
எனவே, படப்பிடிப்பை நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி மற்றும் பத்திரிக்கையாளர் சங்கத்தினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.