இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்’ என்ற பெயரில் நடைபெறும் ராகுல் காந்தியின் யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து கடந்த 14ம் தேதி தொடங்கியது. மணிப்பூரில் தொடங்கிய இந்த நடைபயணம் ஜனவரி 29ஆம் தேதி பிகாரில் நுழைந்தது. தொடர்ந்து இரண்டு நாள் பிகாரில் மேற்கொண்ட இந்த நடைபயணம் இன்று காலை மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் இருந்து மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில், ராகுல் காந்தி சென்ற கார் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் பின்பக்க ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. ஆனால் ராகுல் காந்திக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனக் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் விலகி பாஜகவுடன் சேர்ந்ததை ராகுல் விமர்சித்திருந்தார். இதையடுத்து, இன்று அவர் சென்ற காரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் மால்டாவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.