செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தலைமை காவலர் கைது..!!

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி. இவர் தனது கணவருடன் கடந்த 27ம் தேதி ஜோதி நகர் மினர்வா பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்து தப்பினார்.

அதேபோல கோலார்பட்டியைச் சேர்ந்த அம்சவேணி (32) தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதே நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து தப்பினார். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த துனிகர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து அந்த நபர் காவலராக பணியாற்றி வரும் சபரிகிரி (41) என்பது உறுதி செய்யப்பட்டது. சபரிகிரியை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது கடன் சுமை இருந்ததால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவரிடம் இருந்து 8 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களுக்கும் சபரிகிரிக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலரே பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News