வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் என்ற புயலாக இன்று மாலை வலுப்பெறுகிறது. இதனால் நாளை மறுதினம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் வருகிற 9ம் தேதி வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்து, அங்கு மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லவில்லை.
புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாட்டுக்குள் 5 குழுக்களையும், புதுச்சேரிக்கு 3 குழுக்களையும் அனுப்பிவைத்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை ஆகியவையும் தயார்நிலையில் உள்ளது என்றும், மாநிலங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவ்பா தெரிவித்துள்ளார்.