தேசிய கட்சிகள் மாநிலத்தின் பிரச்சினையை காது கொடுத்து கேட்பது கிடையாது அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் சங்ககிரியில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமை வகித்தார். அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பங்கேற்றுப் பேசியதாவது:
அதிமுகதான் ஜனநாயக கட்சி. திமுகவோ வாரிசு அரசியல் கட்சி. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு, ஏதோ தில்லுமுல்லு செய்து கொல்லைப்புறத்தின் வழியாக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார். அவருக்குப் பிறகு அவரதுமகன்.
உதயநிதி ஸ்டாலினை விளையாட்டுத் துறை அமைச்சராக்கி முன்னிலைப்படுத்தி வருகின்றனர். ஆனால், அதிமுகவில் அப்படியில்லை. அதிமுகவில்தான் ஒருகிளைச் செயலாளர் முதல்வராகவும், பொதுச்செயலாளராகவும் ஆக முடியும்.
தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் வேறெந்த கட்சியிலும் இது நடக்காதது, அதிமுகவில் நடக்கிறது. தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்துவிட்டால் தேசிய அளவில் பார்வை சென்றுவிடுகிறது. அவர்கள், மாநிலத்தின் பிரச்சினையை காது கொடுத்து கேட்பது கிடையாது.
தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க, தேவையான திட்டம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் நிதியை பெற்று வர தமிழக மக்களுக்கு யார் உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மத்தியில் ஆதரவு கொடுக்கப்படும். தமிழக மக்களுக்கு பிரச்சினை வரும்போது அதை எடுத்துச் சொன்னால் காது கொடுத்துக் கேட்பது கிடையாது.
அதனால் நாம் பிரிந்து விட்டோம். நமது உரிமைகளை பாதுகாக்க பிரிந்து விட்டோம். தமிழக மக்களின் பிரச்சினையை அதிமுக கூட்டணி தீர்த்து வைக்கும். சில பேர் கேட்கின்றனர் எங்கே கூட்டணி என்று. பொறுத்து இருந்து பாருங்கள் அதிமுக கூட்டணி சிறப்பான கூட்டணி அமைக்கும்.
ஆனால், திமுக, தேசிய அளவில் இண்டியா கூட்டணி என ஒன்றை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். ஆனால் கார் டயர்போல் ஒவ்வொன்றாக கழன்று சென்று கொண்டு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் ராசியானவர். கடந்த மக்களவைத் தேர்தலில் அவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.
ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை. தற்போது இண்டியா கூட்டணி என முதல்வர் ஸ்டாலின் சொல்ல சொல்ல ஒவ்வொரு கட்சியாக பிரிந்து சென்று கொண்டுள்ளன என்றார். கட்சியின் தொழில்நுட்ப பிரிவுமாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.