சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
ஆனால், வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 8 நாட்களாக அவரது உடலைத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில், தனது மகனைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக சைதை துரைசாமி அறிவித்தார்.
இந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது. வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 4 மணியளவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக மாலை 5 மணி அளவில் வைக்கப்பட்டு 6 மணியளவில் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் வெற்றியின் உடலை மீட்ட ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாயை வழங்க உள்ளதாக சைதை துரைசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.