நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 56 பேரின் பதவி காலம் முடிவடைகிறது. இவர்கள் அனைவரும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படவேண்டும்.
இதற்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இதற்காக பா.ஜ.க, சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரலியில் போட்டியிடும்போதே சோனியா காந்தி, இனி மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.
அதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் அவர் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சோனியா காந்தி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் செல்லும் அவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதால் தற்போது சோனியா காந்தி உறுப்பினராக இருக்கும் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.