கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரரரான ரோஹன் போபண்ணா சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் தனது சக வீரருடன் மேத்யூ எப்டன் இணைந்து பட்டம் வென்றார்.
அந்தப் போட்டியில் இத்தாலிய ஜோடியான சைமன் பொலேல்லி – ஆண்ட்ரியா வாவசோரியை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இருவரும் தன்வசப்படுத்திக் கொண்டனர்.
இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிக வயதான வீரர் என்ற சாதனையை ரோஹன் போபண்ணா படைத்தார். மேலும், இதுவே ஆடவர் இரட்டையர் பிரிவில் அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் தன் 43வது வயதில் ரோஹன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், ரோஹன் போபண்ணாவை நேரில் அழைத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,”ஆஸ்திரேலியா ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றிப் பெற்று சாதனைப் படைத்துள்ள போபண்ணாவை சந்தித்து வாழ்த்து கூறினேன்.
அவரது வெற்றியை கெளரவிக்கும் வகையில் ரூ.50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக ரோஹன் போபண்ணா, டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.