இந்தியாவில் 58 சதவீத மக்கள் பாஜக ஆட்சியின் கீழ் உள்ளனர்: ஜெ.பி.நட்டா!

தேசத்தின் 58 சதவீத மக்கள் பாஜக ஆட்சியின் கீழ் உள்ளனர் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மும்பையில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் நட்டா உரையாற்றினார். அப்போது அவர், “இண்டியா கூட்டணி ஊழல்வாதிகளின் கூட்டணி. பல்வேறு கட்சிகளிலும் ஊழல் நிறைந்தவர்கள் இணைந்து உருவான கூட்டணி. அந்தக் கூட்டணியின் ராகுல் காந்தி ஒரு யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அது ஒற்றுமை யாத்திரை அல்ல ஒற்றுமையை உடைக்கும் யாத்திரை. நீதி யாத்திரை அல்ல அநீதி யாத்திரை.

இங்கே மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியின் கீழ் ஊழல் நடைபெற்றது. அவருடைய உள்துறை அமைச்சர் சிறைக்குச் சென்றார். இப்போது டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை சம்மனை ஏற்காமல் புறக்கணித்து வருகிறார். விசாரணையின் மீது அவருக்கு என்ன அச்சம் என்று தெரியவில்லை!. அதனால் தான் சொல்கிறேன், பல்வேறு கட்சிகளிலும் ஊழல் நிறைந்தவர்கள் இணைந்து உருவான கூட்டணி என்கிறேன்.

1980-களில் பேசிய நம் தலைவர் வாஜ்பாய், ‘இருள் அகலும். ஒளி பிறக்கும். தாமரை மலரும்’ என்றார். இதோ இப்போது நமது பிரதமர் மோடி தலைமையில் தாமரை மலர்ந்துள்ளது.

பாஜக கடினமாக பாதைகளைக் கடந்து வந்துள்ளது. நாம் நிறையப் போராடியுள்ளோம். இரட்டை இலக்கம் தான் நம் அடையாளமாக இருந்தது. இப்போது இந்த உலகில் நாம் மிகப்பெரிய கட்சியாக அறியப்படுகிறோம். நாம் இருளில் இருந்து விலகி ஒளியில் இருக்கிறோம் என்பதை நாம் புரிது கொள்ள வேண்டும். முன்பு ஏதோ ஐந்தாறு மாநிலங்களில் ஆட்சி செலுத்தினோம். இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. தேசத்தின் 58 சதவீத மக்கள் பாஜக ஆட்சியின் கீழ் உள்ளனர். 10 ஆண்டுகளில் மோடி இந்திய அரசியலின் அர்த்தத்தையே மாற்றி அமைத்துள்ளார். முந்தைய ஆட்சிகளில் ஏழைகள் வஞ்சிக்கப்பட்டனர். ஆனால் மோடி ஆட்சி ஏழைகளுக்கு, பெண்களுக்கு அதிகாரமளித்துள்ளது” என்றார்.

RELATED ARTICLES

Recent News