வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா மாநிலம் கடப்பா, சித்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சாத்து மதுரை கிராமத்தைச் சேர்ந்த சுபா (வயது 36), சிறுநீரக தொற்று காரணமாக உள்நோயிளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை பார்ப்பதற்காக திருவண்ணாமலை சேர்ந்த அவரது உறவினர், திவாகர் (35) என்பவர் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது திவாகர் அருகில் இருந்த நோயாளிகள் படுக்கையில், படுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் பி.ஜி. இரண்டாம் ஆண்டு படிக்கும் பயிற்சி மருத்துவர் விஷால் என்பவர் நோயாளிகளை பரிசோதிக்க சிகிச்சை பிரிவுக்கு வந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர் விஷால், திவாகரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த திவாகர், சுதா ஆகியோர் சேர்ந்து மருத்துவர் விஷாலை சரமாரியாக தாக்கினர். அப்போது மருத்துவர் பதிலுக்கு தாக்கினார். அப்போது சுபா மருத்துவரை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நோயாளிகள், கூச்சலிட்டபடி அங்கும், இங்கும் சிதறி ஓடினர். இதனைப் பார்த்த அங்கிருந்த பணியாளர்கள் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனை முழுவதும் காட்டு தீ போல் பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர் இதனைத் தொடர்ந்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் சுபா மற்றும் திவாகர் ஆகியோர மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திவாகரை கைது செய்துள்ளனர்.