அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்: அதன் விவரம்!

நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

ஏப்ரல் 19-ம் தேதி நடக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். அன்றைய தினம் தமிழ்நாட்டின் 39, புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும்.

ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் சனிக்கிழமை (மார்ச்) முதல் நடைமுறைக்கு வந்தன.

அதன்படி, தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நடத்தை நெறிமுறைகள் விவரம்:

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

புதிய திட்டங்கள் கூடாது:

ஆட்சியில் இருக்கும் கட்சிகள், வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது. நிதி உதவிகளை அறிவிப்பது. வாக்குறுதிகளை அளிப்பது மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. மாநில அளவில் நடைபெறும் திட்டங்களை அரசு அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். அதில் அரசியல் கட்சியினரின் தலையீடுகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசின் திட்டங்களுக்கு புதிதாக நிதி ஒதுக்கவோ அனுமதி அளிக்கவோ கூடாது. அமலில் இருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் என்றாலும்கூட, அவற்றை அமைச்சர்கள் ஆய்வு செய்யவோ செயல்படுத்தவோ கூடாது. மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவோ அல்லது திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை அளிப்பது என்றாலோ தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது. தொகுதி மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கும் இது பொருந்தும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டிருந்தாலும், பணி தொடங்கியிருக்காத நிலையில் புதிதாக அந்தப் பணிகளை தொடங்கக் கூடாது. ஏற்கெனவே பணி தொடங்கப்பட்டிருந்தால் அவற்றை தொடர்ந்து நடத்தலாம். பணி முடிந்ததும், அதிகாரிகள் திருப்தி அடைந்தால் அதற்கான பணத்தை விடுவிக்கலாம்.

வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் தொடர்பான அவசர கால நிவாரணம் வழங்கும் திட்டங்கள், வயது முதிர்ந்தோருக்கான திட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவிக்காது. ஆனால், இதற்கான முன்அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் பெற்றிருக்க வேண்டும்.

பெயர்கள் வெளியே தெரியக் கூடாது:

அரசுத் திட்டங்களின் நிதியுதவியுடன் இயங்கும் தண்ணீர் லாரி, ஆம்புலன்ஸ் போன்றவற்றில் எழுதப்பட்டுள்ள சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், தேர்தல் முடியும் வரை வெளியே தெரியாமல் மூடப்பட்டிருக்க வேண்டும். களத்தில் திட்டப் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் அதை சம்பந்தப்பட்ட அரசு முகாமை நடத்தலாம். மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளைக் கொண்டு, ஏற்கெனவே பட்டியலிடப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருக்கும் புதிய திட்டப் பணிகளை தொடங்கலாம்.
ஏற்கெனவே ஒப்பந்தப் பணிகள் நிறைவு பெற்றிருந்தால், தோதல் ஆணையத்தின் அனுமதிக்குப் பிறகு பணிகளைத் தொடங்கத் தடையில்லை.

நிவாரண நிதிக்குத் தடையில்லை:

பிரதமர், முதல்வர் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைகளை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவையில்லை. அரசு வாகனங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது. வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதற்கு மட்டும் அமைச்சர்கள் அரசு வாகனர்களைப் பயன்படுத்தலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிகாரிகளை தனியாகவோ அல்லது குழுவாகவோ அழைத்து, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் காணொலிக் காட்சி மூலம் பேசக் கூடாது. மிகவும் அவசர நிலை என்றால், தலைமைத் தேர்தல் அதிகாரியை அணுகி அனுமதி பெற்று பேச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News