வெற்றியுடன் ஐபிஎல் தொடரை தொடங்கியது சென்னை அணி!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி பேட்டிங் தேர்வு செய்தார்.

அதிரடி தொடக்கம் தந்த டூபிளஸ்ஸி 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஜத் பட்டிதாரும் மேக்ஸ்வெல்லும் டக் அவுட்டாகி பெங்களூரு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

நிதானமாக விளையாடிய கோலி 21 ரன்களுக்கும் கேமரான் க்ரீன் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது தினேஷ் கார்த்திக் – அனுஜ் ராவத் ஜோடி பொறுப்பாக ஆடியது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் இருவரும் சேர்ந்து 25 ரன்கள் அடிக்க பெங்களூருவின் ரன் உயர்ந்தது.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48 ரன்கள் அடித்தார். மிரட்டலாக பந்து வீசிய சென்னை பவுலர் முஷ்தபிஸூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 174 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களுக்கு கேட்ச் ஆனார்.

சிக்சர்களைப் பறக்கவிட்ட ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். அஜிங்யா ரஹானே மற்றும் மிட்செல் தலா 2 சிக்சர்கள் அடித்து வெளியேறினர். இதனையடுத்து 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷிவம் துபே – ரவீந்திர ஜடேஜா ஜோடி சென்னை அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தது. 19வது ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்த சென்னை, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை வீரர்கள் ஷிவம் துபே 34 ரன்களும் ஜடேஜா 25 ரன்களும் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. தோனியிடம் இருந்து கேப்டன்ஷிப்பை பெற்ற ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில், சென்னை அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது.

முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் அக்சய்குமார், டைகர் ஷெராப், பாடகர் சோனுநிகாம் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட துவக்க விழா நடைபெற்றது.இதை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

RELATED ARTICLES

Recent News