கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கொட்டங்குளங்கர என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில், சமயவிளக்கு என்ற திருவிழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த திருவிழாவின்போது, ஆண்கள் அனைவரும் பெண்களை போல் வேடமணிந்து வருவது, மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திருவிழாவையொட்டி, நேற்று தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், ஒரு ஆணும், அவரது 5 வயது பெண் குழந்தையும் கலந்துக் கொண்டுள்ளனர். சிறுமியை அவரது தந்தை, தனது கையில் தூக்கிக் கொண்டு, தேரை இழுத்துள்ளார்.
அப்போது, அவரது கை வழுக்கி, சிறுமி கீழே விழுந்து, தேர் சிறுமியின் மீது ஏறியுள்ளது. இதனை அறிந்து பதற்றம் அடைந்த பொதுமக்கள், சிறுமியை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், வரும் வழியிலேயே அந்த 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.