17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற
6-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 45 (37) ரன்களும், 27 ரன்களும் எடுத்தனர்.
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது.
அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியில் பாப் டு பிளெஸ்ஸிஸ் (3), கிரீன் (3), மேக்ஸ்வெல் (3) சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
ஆனாலும் அதிரடியாகவும், பொறுப்புடனும் ஆடிய விராட் கோலி அரைசதம் விளாசினார். மொத்தம் 49 பந்துகளை எதிர்கொண்ட அவர், 2 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை சிதறடித்தார். அவருக்கு ஆதரவாக லாம்ரோர் அதிரடியில் மிரட்டினார்.
கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தினேஷ் கார்த்திக், அடுத்த பந்தில் பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்தார்.
இதன்மூலம் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களும், லாம்ரோர் 8 பந்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களும் எடுத்தனர்.