நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சமூக வலைத்தளங்கள் மூலமாக விளம்பரம், தொலைக்கட்சிகளில் விளம்பரம் என அரசியல் கட்சிகள் மக்களை கவர பல்வேறு வழிகளிலும் பிரசாரங்களை செய்து வருகின்றன.
இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பெரம்பூரில் நூதன பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. அதாவது பிரதமர் மோடி கடந்த பத்தாண்டுகளாக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று விமர்சித்து மோடி ஆட்சி வாயில் சுட்ட வடை என 5 அரை அடியில் பெரிய வடையை சுட்டு, மோடி நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு காட்டியுள்ளது.
பொதுமக்களுக்கு மோடி அரசு அல்வா கொடுத்து விட்டதாக அல்வா பாக்கெட்டுகள் விநியோகம் செய்வது.. மோடியின் வடைகள் என நிறவேற்றாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, சுடச்சுட மக்களுக்கு விநியோகம் செய்வது.. என விதவிதமான பிரசாரத்தில் திமுகவினர் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 7 ஆம் தேதி, நெல்லையில் ‘மோடியின் வடை கடை’ என்ற பதாகையுடன் சுடச்சுட வடைசுட்டு கொடுத்து திமுகவினர் நூதன பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல், கோவை, திருப்பூரிலும் இதேபோன்று நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.