கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் சோனார்வாடா பகுதியை சேர்ந்தவர் அருண் வார்னேகர். இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். மேலும் தனது வீட்டில் மோடிக்காக கோவில் கட்டி, தினமும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் மோடி பிரதமராக வேண்டி தனது இடது கை விரலை வெட்டி காளி தேவிக்கு அருண் வார்னேகர் ரத்த அபிஷேகம் செய்துள்ளார்.
வீட்டில் உள்ள மோடி கோவிலின் சுவரில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், 378க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் ரத்தத்தில் எழுதியுள்ளார்.
2014ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது மோடி பிரதமராக வேண்டி தனது விரலை வெட்டி, ரத்தத்தால் இந்து மதக்கடவுள் காளிதேவிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.