நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில், பாஜக சார்பில், நடிகை கங்கனா ரணாவத் போட்டியிட உள்ளார்.
இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, எதிர்கட்சியினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவர், கங்கனா ரணாவத் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
அதாவது, “பழைய எக்ஸ் பதிவு ஒன்றில், மாட்டு இறைச்சி சாப்பிடுவது தனக்கு பிடிக்கும் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார்” என விஜய் வடேட்டிவர் குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த கருத்து, இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறு இருக்க, நடிகை கங்கனா ரணாவத், தனது சமூக வலைதளப் பக்கத்தில், விஜய் வட்டேட்டிவரின் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, “மாட்டு இறைச்சி அல்லது எந்தவொரு அசைவ உணவுகளையும் நான் சாப்பிட மாட்டேன். அடிப்படை ஆதாரம் கூட இல்லாமல், என்னை பற்றிய அவதூறுகளை பரப்புவது அவமானகரமானது.
நான் பல ஆண்டுகளாக, ஆயுர்வேத வாழ்க்கை முறைக்கு ஆதரவாகவே பேசி வந்துள்ளேன். இதுமாதிரியான யுக்திகள் என்னுடைய புகழை களங்கப்படுத்த முடியாது. என்னுடைய மக்களுக்கு என்னை பற்றி தெரியும். எந்தவொரு வதந்தியும் அவர்களை தவறாக வழிநடத்தாது. ஜெய் ஸ்ரீராம்” என்று பதிவில் கூறியுள்ளார்.