தேனியில் தொடர் மழையால் மலைச்சாலை சேதம் : தொழிலாளர்கள் அவதி

தேனி மாவட்டம் மேகமலை அருகே தொடர் மழையால் மலைச்சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் பாதி வழியிலேயே பஸ்களை நிறுத்துவதால் தேயிலைத் தொட்ட தொழிலாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாகவும் அமைந்து உள்ள இந்தப் பகுதிக்கு 18 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைச்சாலையில் தேனி மற்றும் கம்பம் பகுதியில் இருந்து இரவங்கலாறு வரை நாள்தோறும் அரசு பஸ்கள் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால், மேகமலை அடுத்து உள்ள வென்னியாறு கிராமம் அருகே உள்ள சாலை மழைநீரால் பழுதடைந்து உள்ளது. இந்த வழியே சென்ற அரசு பேருந்து பயணிகளுடன் சேற்றில் சிக்கி கொண்டது. நீண்ட நேரம் போராடி நடுவழியில் பயணிகளை இறக்கி விட்டு பேருந்தை மீட்டனர்.

இதனால் அந்த கிராமங்களுக்கு செல்லும் தேயிலை தொட்ட தொழிலாளர்களும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் சென்றுவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 5 கிலோமீட்டர் தூரம் மலைச்சாலையில் நடந்து சென்று வரும் அவல நிலை ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

மழைக்காலங்களில் இரவங்கலாறு வரை இயக்கப்படும் பஸ்கள் சென்று வர போதிய சாலை வசதி இல்லாததால் அப்பகுதியில் தற்போது போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீர் செய்தால் தான் போக்குவரத்து தொடரும் என அரசு போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது போக்குவரத்து தடையால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்பவர்களும் சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News