தூய்மை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை குறைத்து வழங்கியதால் 150க்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய நான்கு மண்டலங்களில் 573 தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழுவின் கீழ் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியமாக ரூபாய் 480 வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் குறைவாக கொடுப்பதாக கூறி இன்று தச்சநல்லூர் மண்டல அலுவலகம் முன்பு 150 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தங்களுக்குரிய சரியான ஊதியத்தை வழங்க கோரி பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ராம் அண்ட் கோ கம்பெனி மூலம் வழங்கப்படக்கூடாது. சுய உதவி குழுக்களின் மூலமாக வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். தங்களுடைய ஊதியம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.