அதிமுக தொண்டர்கள் வாக்கு டிடிவி.தினகரனுக்கு தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசுகையில், “அண்ணாமலையும், டிடிவி தினகரனும் ஏன் ஒன்றிணைந்துள்ளோம் என்றால், தமிழகத்தின் அரசியல் மாறிக்கொண்டிருக்கிறது. 2026ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம் தான் தற்போது நடக்கும் மக்களவை தேர்தல். 400 இடங்களை பெற்று மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும், அதில் முதன்மை உறுப்பினராக தேனியின் குரலாக தானும் இருக்க வேண்டும் என்று டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். தமிழகத்தை முதலில் ஸ்டாலினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். தமிழகத்தை கோபாலபுரம் குடும்பத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும். 33 மாதங்களாக அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டணி அமைந்துள்ளது.
தேனியில் டிடிவி.தினகரன், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் என அனைத்து இடங்களிலும் கூட்டணியின் மூத்த தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்சியில் இருந்து வேறு யாரவது ஒருவரை நிறுத்தியிருக்கலாம். ஏன், அவரே களத்தில் இறங்கியுள்ளார் என்றால், மோடி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும், தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தான்.
ஒரு பக்கம் ஸ்டாலினின் திமுக, மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக. இருகட்சிகளும் பெயரில் தான் வேறு. மற்ற செயல்களில் அனைத்தும் ஒன்றுதான். இருகட்சிகளும் சேர்ந்து டிடிவி.தினகரனை தோற்கடிக்க முயல்கிறார்கள். ஆனால் மக்கள் அவர்கள் பக்கம் இல்லை. அதிமுக தொண்டர்கள் வாக்கும் டிடிவி.தினகரனுக்கு தான். அதிமுக தொண்டர்கள் அமமுகவுடன் இணைய போகிறார்கள். அவர்களை வழிநடத்தக் கூடிய உண்மையான தலைவன் யார் என்பது அதிமுக தொண்டர்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும்.
பூச்சாண்டிகளையும், போலித் தலைவர்களையும் எந்த தொண்டனும் கண்டுபிடித்து விடுவான். அப்படிபட்ட தலைவர்கள் தான் இப்போது தேர்தலில் ஒன்று சேர்ந்து உள்ளார்கள். ஸ்டாலின், இபிஎஸ் இருவருக்கும் டிடிவி.தினகரனை பிடிக்காது. காரணம், அவர் வெற்றிபெற்றுவிட்டால் தமிழகத்தின் அரசியல் மாறும் என்பது இருவருக்கும் தெரியும்.
ஜூன் 4ம் தேதி டிடிவி.தினகரன் வெற்றிபெற்ற பிறகு உண்மையான மக்களை சார்ந்த அரசியல் நடக்கும். அதனால் தான் இருவரும் இணைந்து இவரை தோற்கடிக்க கங்கனம் கட்டிக்கொண்டு தேனியில் பேசிவிட்டு சென்றுள்ளனர் ” என்று தெரிவித்துள்ளார்.