சிரியாவில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம் மீது, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக, சமீபத்தில் செய்தி ஒன்று பரவி வந்தது. இதனால், கடும் கோபம் அடைந்த ஈரான் நாட்டு அரசு, இஸ்ரேலின் ராணுவ தளங்கள் மீது, ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
ஆனால், அந்த தாக்குதல்களை, தங்களது நவீன ஆயுதங்கள் மூலம், தடுத்து நிறுத்திய இஸ்ரேல், பெரும் சேதத்தை தவிர்த்திருந்தன.
இவ்வாறு இரண்டு நாடுகளுக்கு இடையே, போர் ஏற்படும் சூழல் நிலவியிருந்த நிலையில், “நாங்கள் இஸ்ரேல் நாட்டிற்கு பாதுகாப்பு மட்டுமே தருவோம். மற்றபடி, இஸ்ரேலின் பதிலடி தாக்குதலுக்கு, உதவ மாட்டோம்” என்று அமெரிக்கா கூறியிருந்தது.
இதனால், இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தாது என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது அதிரடி தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, அணு உலைகள் அதிகம் உள்ள ஈரானின் இசாஃபஹான் நகரத்தில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
அந்நகரில் உள்ள விமான நிலையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு வரப்படும் விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலில், இஸ்ரேல் – ஹமாஸ் என்ற தீவிரவாத அமைப்புக்கும் இடையே தான், போர் தொடங்கியது. தற்போது, அண்டை நாடுகளுக்கும் இடையே, இந்த பகைமை வளர்ந்து வருவது கவலையளிப்பதாக, சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.