மதுரை அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையத்தேவன், மைக்கேல், அசோக், கார்த்தி உள்ளிட்டவர்களுக்கு, அப்பகுதியில் நடைபெற்ற வீரகாளியம்மன் கோவில் திருவிழாவில் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நவீன்குமார் தனது காரில், கீழவளவு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வெள்ளையத்தேவன், அசோக், கார்த்தி உள்ளிட்ட சிலர் டிபன் பாக்ஸ் குண்டை நவீன்குமாரின் காரின் முன்பக்க கண்ணாடி மீது வீசி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன்குமார், காரில் இருந்து இறங்கிய நிலையில், அவரை வெள்ளையத்தேவன் தான் வைத்திருந்த வாளால் வெட்டி உள்ளார்.

இதில் நவீன்குமாரின் வலது கை விரல் துண்டானது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக வரவும், வெள்ளையத்தேவன் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் ஓடி உள்ளனர்.

மேலும் இந்த டிபன் பாக்ஸ் குண்டு வீச்சில், நவீன்குமார் கார் அருகே நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் என்பவருக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த நவீன்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து, கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வெள்ளையத்தேவன், மைக்கேல், அசோக், அஜய், கார்த்தி, வசந்த், கண்ணன், மற்றும் பாலு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, வெள்ளையத்தேவன் மற்றும் அசோக் ஆகிய இருவரை கைது செய்து, வாள், டிபன் பாக்ஸ் குண்டு, ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமான தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News