கர்நாடக மாநிலம் ஹப்பள்ளி பகுதியில் உள்ள பி.வி.பி கல்லூரியில், எம்.சி.ஏ படித்து வந்தவர் நேஹா. 23 வயதான இவர், கடந்த 18-ஆம் தேதி அன்று, அக்கல்லூரியின் முன்னாள் மாணவரால், கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விரைவாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளியை கைது செய்தனர். இந்த சம்பவம், பாஜகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே, பெரும் அனல் பொறியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இதுகுறித்து கர்நாடக மாநிலத்தின் அமைச்சர் பிரியங் கார்கே, ஏ.என்.ஐ-க்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “ சட்டப்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தையும் நாங்கள் எடுத்துவிட்டோம். எப்போதும் போல, சமூகத்தை பிரிப்பதற்கான வாய்ப்பாக தான், இந்த விவகாரத்தை பாஜக பார்த்து வருகிறது.
இவ்வாறு பிரிப்பதில், அவர்கள் வல்லவர்களும் கூட. நாங்கள் குற்றவாளியை கைது செய்துவிட்டோம். விசாரணையையும் நாங்கள் தொடங்கிவிட்டோம். மேலும், எந்தவொரு சந்தேகமும் வேண்டாம், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, “இப்படியான ஒரு கொடூர சம்பவம், பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால், விதிகள் மாற்றப்பட்டிருக்குமா? நிச்சயமாக இல்லை. ஆனால், தேர்தல் நேரத்தில், பாஜக இதனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது.” என்று கூறினார்.
உயிரிழந்த நேஹாவின் வீட்டுக்கு ஜே.பி.நட்டா சென்றது குறித்து, “அது மிகவும் நல்ல விஷயம். ஆனால், வேறு விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை, அவர் எப்போது சந்திக்க போகிறார்.
சமீபத்தில், பெங்களூர் பகுதியில் உள்ள ஜே.பி நகரில், இரட்டைக் கொலை நடந்தது. அதே இடத்தில், பாஜகவின் மிகவும் முக்கிய நிர்வாகி மீது, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏன் அதைப் பற்றியும் அவர் பேசாமல் இருக்கிறார்?” என்று கூறி, பதிலடி கொடுத்தார்.
மேலும், “சமூகத்தை மதசார்பற்றதா வைத்திருப்பது, எவ்வளவு கடினமான விஷயம் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. நாங்கள் இந்தியாவை ஒற்றுமையாக வைக்க முயற்சிக்கிறோம். ஆனால், அவர்கள் உடைக்க நினைக்கிறார்கள்” என்று அவர் கடைசியாக கூறியிருந்தார்.
ஜே.பி.நட்டா நேற்று, நேஹாவின் கொலை வழக்கு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதன்படி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும், உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவும், இந்த விவாகரத்தின் விசாரணையை நீர்த்துப் போக செய்கின்றனர் என்றும், எனவே, சி.பி.ஐ விசாரணைவேண்டும் என்றும், ஜே.பி.நட்டா கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக கையில் எடுத்துள்ள பாஜக அரசு, லவ் ஜிகாத் என்ற அரசியலை கர்நாடகாவில் பேசி வருகிறது.